"விதை பயங்கரவாதம்" - விதை இறையாண்மை மீதான மற்றுமொரு போர் !?

 

கடந்த இருவாரங்களில் விதை குறித்து பகிரப்பட்ட இரண்டு முக்கிய செய்திகள் தேசிய அளவில் ஒரு பேசு பொருளாக ஆனது. பன்னாட்டு நிறுவனங்களும், அதன் பொருளுதவில் நடைபெறும் ஆய்வுகளும் அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மரபணு மாற்று விதைகளும், அதன் பரவல்களும்  நமது விதை பன்மயத்தின் மீதும், சூழல் சார் மரபு விதைகளின்  பாதுகாப்பிற்கும் ஒரு நேரடி அச்சுறுத்தல் எனில், இந்திய தேசிய விதை கழகம் (National Seed Association of India) சமீபத்தில் வெளியிட்டுள்ள வெளியில் இருந்து ஊடுருவும் விதை பயங்கரவாதம் குறித்த எச்சரிக்கை மற்றுமொரு மறைமுக தாக்குதல் ஆகும். 

தி ஹிந்து பிசினஸ்லைன் தனது இணைய நாளிதழில் கடந்த ஆகஸ்ட் 3, 2020 வெளியிட்டுள்ள NSAI asks Centre to watch out for Chinese 'seed terrorism' கட்டுரையில் சர்வதேச விதை பரிசோதனை அமைப்பின் (International Seed Testing Association – ISTA) எச்சரிக்கையின் அடிப்படையில் சீனவில் இருந்து இந்திய சந்தைகளில் ஊடுருவி உள்ள சந்தேகத்திற்குரிய விதைகள் குறித்த எச்சரிக்கையினை மத்திய அரசுக்கு NSAI தெரிவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

Ref: https://www.thehindubusinessline.com/economy/agri-business/nsai-asks-centre-to-watch-out-for-chinese-seed-terrorism/article32257758.ece?fbclid=IwAR1YrOCBoy9HsgsvtXxwoeikmmFUdoZcZfRWGqY5eWxA--EAJOp-SUHVtak



இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள NSAI-ன் கொள்கை மற்றும் வெளிவிவகார இயக்குனர் திரு. இந்திர சேகர் சிங் கூறுகையில் “சீனா மற்றும் இதர பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தாவர வகைகளின் மூலவுயிர் (germplasm) மற்றும் மரபணு குறித்த தகவல்களை திரட்டி வருகின்றன. அதிலும் சீனா கடந்த 20 – 25 வருடங்களாக நமது தாவர வகைகளின் மூல உயிர் குறித்து ஆராய்ந்து அதன் உயர்தர மூலங்களை சீனாவுக்கு கொண்டு சென்றுள்ளாதாக” தெரிவிக்கிறார். எளிதில் பாதிப்படையும் வகையில் உள்ள இந்திய சூழல் பன்மயம் இத்தகைய தூய்மையற்ற விதைகளால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.

சீனாவின் அதி முன்னேற்றமடைந்த உயிர் தொழில்நுட்ப முறைகள் நமது உணவு பாதுகாப்பிற்கு முக்கிய பிரச்சினை மட்டுமின்றி நமது உணவு உற்பத்தியினை முற்றிலும் அழிக்கக்கூடியது என அவர் தெரிவித்துள்ளார். NSAI-ன் கூற்றுப்படி ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஸ்டிரா-வில் மட்டும் ரூ. 300 கோடி மதிப்புள்ள (சுமார் 24 லட்சம் கிலோ) தரமற்ற HT பருத்தி விதைகள் உலவி வருகிறது. இந்த நிலை நமது பணப்பயிர்களுக்கு மட்டுமின்றி உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறி பயிர்களுக்கும் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். 

இத்தகைய தரமற்ற உணவு உற்பத்திக்கான விதைகள் சீனாவில் இருந்து நமது நிலங்களில் இதுவரை வந்தடைய வில்லை என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. இதே நிலையை அமெரிக்க போன்ற முன்னேறிய நாடுகளும் சந்திந்து வரும் வேளையில், நமது விவசாயி தமக்கு கிடைக்க கூடிய விதைகளின் தரம் மற்றும் உண்மை தன்மை குறித்து எவ்வாறு கண்டறிய முடியும் என்பது நம் முன் உள்ள முக்கிய கேள்வி.

ஒருவகையில் இச்செய்தி நமது அருகாமையில் நமது மரபு விதை சேகரிப்பாளர்களால் உற்பத்தி செய்யப்படும் விதைகளுக்கான முக்கியத்துவத்தினை உணர வைக்கும். அதே சமயம் நமது விதை சேகரிப்பாளர்களும், விதை சேகரிப்பிலும், பரவலாக்குவதிலும் மேலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது உணர்த்துகிறது.

இந்த செய்தியை தொடர்ந்து இந்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மாநில வேளாண் துறைகளுக்கும், வேளாண் பல்கலைகழகங்களுக்கும், விதை கழகங்களுக்கும் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் சீனாவில் இருந்து ஊடுருவும் விதைகள் குறித்து எச்சரிக்கையுடன் செயல்பட கேட்டுக்கொண்டுள்ளது.

Ref: https://www.thehindubusinessline.com/economy/agri-business/ministry-of-agriculture-asks-states-and-agencies-to-be-vigilant-about-suspicious-seed-parcels/article32293802.ece?fbclid=IwAR2WcQ8o8GJj00OY47jqvwCgJzMLvPltMd-SAfo_70NQ4-VCQ9jlPHHQvtw

இது குறித்து மாநில அரசோ அது சார்ந்த துறைகளோ எடுக்கும் சட்ட நடவடிக்கைகள் ஒரு பக்கம் இத்தகைய தரமற்ற விதை ஊடுருவலை கட்டுப்படுத்தும் எனினும், நமது மரபு விதை சேகரிப்பாளர்கள் மற்றும் சிறு விதை உற்பத்தியாளர்களையும் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். இத்தகைய நிலை ஒரு மரபு விதை உற்பத்தியாளருக்கும், சேகரிப்பாளருக்கும் மற்றும் விற்பனையாளருக்கும் சட்ட ரீதியான தொந்தரவுகளை தரக்கூடியதாக அமையும் அச்சம் உள்ளது. ஒருவகையில் இந்த நிகழ்வு ஒரு இருமுனை தாக்குதலாகவே இருக்கும்.  

இது குறித்த செய்திகளை தொடர்ந்து நமது விதை சேகரிப்பாளர்களிடம் கொண்டு செல்வது மட்டுமின்றி , பொதுவெளியில் இது குறித்த விழிப்புணர்வையும், தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் நம் முன் உள்ள முக்கிய சவால்.  

 

 

Comments

Popular posts from this blog

Seed Sovereignty: Conservation Challenges & Future Possibilities

விதை இறையாண்மை: சவால்கள் மற்றும் சாத்தியங்கள்